Mail Me

antos songs

Friday, March 30, 2012

மொழி

 

உன்னுடன் சேர்ந்து வரும்
மௌனம் போதுமெனக்கு
என்னுடன் நீ
பேச வேண்டியது அவசியமில்லை
எனது பேச்சினைக் கேட்டு
எதையும் வெளிப்படுத்த வேண்டியதில்லை
உன் மௌனத்தைத் தவிர
உனது மௌனம் என்னை
மறுத்துப் பேசாது
உனக்கும் எனக்குமிடையே என்றும்
கருத்து வேறுபாடுகளில்லை
எனது மொழி உனக்கும்
உனது மௌனம் எனக்கும் விளங்கும்
தொடர்பின்றி நான் பேசினாலும்
உனது மௌனம் என்னிடம்
கைகட்டி தலை குனிந்து நிற்கும்
உனக்கும் எனக்குமிடையே
போட்டிகளோ பொறாமைகளோ இல்லை
என்றும்
நீ
உன் மௌனத்தைக் கடைபிடிக்கும்வரை.

கடவுளைக் கொன்றுவிட திட்டமிட்டிருக்கிறேன்



 




ஆம்
இன்றைக்கு எப்படியாவது
கடவுளைக் கொன்றுவிட 
திட்டமிட்டிருக்கிறேன்

இனியும் பொறுமையில்லை
முழுமையாக உதிர்ந்து விட்டன
சகிப்புத்தன்மையின் செதில்கள்

வந்துவிட்டார் கடவுள்
எதிர்பார்த்த தருணம் நெருங்கிவிட்டது
பின்புறமிருந்து முகத்தில் 
துணியைப் போர்த்தி
வசமான பிடியுடன் இறுக்குகிறேன்

திமிறிக் களைத்து தோற்று
உடல் தளர்ந்து பிரிகிறது
கடவுளின் உயிர்

குரூரத் திருப்தியோடு கோரப்பற்களில்
வழியும் இரத்தத்தை சுவைத்தபடி
தொலைவில் வந்து பார்க்கிறேன்

தகன மேடையில் யாரோ
கிடத்திக் கொண்டிருக்கிறார்கள்
எனது உடலை.




நான் இறந்திருக்கிறேன்


நான் இறந்திருக்கிறேன்



வானமும் மேகமும் ஒன்றையொன்று 
அணைத்தபடியிருந்த
மழைக்கால காலை அன்றுதான் 
நான் இறந்திருந்தேன்

உறக்கத்திலாழ்ந்திருப்பது போலிருப்பதாக
எல்லோரும் பேசிக் கொண்டார்கள்

இரவுக்குளம் போல 
சலனமற்றிருக்கிறதாம் என் முகம்

யாரையெல்லாம் அழ வைத்தேனோ
அவர்களெல்லாம் அழுது கொண்டிருந்தார்கள்

அழுதழுது ஈரம் வறண்ட சில கண்கள்
வருவோர் போவோரைப் பார்த்தபடியிருக்கின்றன

பதட்டமேதுமின்றி 
பேசிய பேசாத கணங்கள் குறித்து
நினைவுகளைக் கீறியபடி
நின்றிருந்தனர் நண்பர்கள்

விழி தேயப் பார்த்தும்
மொழி சிணுங்கக் கொஞ்சியும்
உடல் மலர பிணைந்தும் 
மையல் கொண்ட காதலிகள்
வந்திருந்தும் வராமலிருந்தும்
வருந்திக் கொண்டிருக்கிறார்கள்

எதிர்பார்த்தது என்றும்
எதிர்பாராதது என்றும்
திணறித்திணறி கள்ளமாய்க் கசிகிறது பேச்சு

அறைக்குள்ளிருந்து என் நினைவுகள் குறித்து
பற்றிய கொடி பறிக்கப்படுகிற வலியோடு
புழுங்கிக் கொண்டிருக்கின்றன புத்தகங்கள்

நான் ரசிக்காமலே
அதிர்ந்து கொண்டிருக்கிறது பறை

ஓய்ந்து கிடக்கிறேன் நான்.



அடைக்கலம்

 


அடைக்கலம்




ஒருவரையொருவர் அடைகாத்தபடி
அரவணைத்தலில்
இருப்பதையே நாம் விரும்புகிறோம்

அன்பின் அதீதத்தில்
திளைக்கிறோம்
அணைப்பு அவசியமாகி விடுவதால்
வேறெதிலும் இல்லாத
பாதுகாப்புணர்வை நாம் பெறுகிறோம்

அணைத்தலில் விலகுகிறது
பயம்

உலர்ந்த மார்புக் காம்புகளில்
உதடுகளின் ஈரம் நெகிழ்த்துவதைப்போல
ஒரு அணைப்பு
போதுமானாதாயிருக்கிறது
எல்லாவற்றுக்கும்

அதிருப்தி
கோபம்
நியாயம்
ஒழுங்கு
எல்லாவற்றையும்
சரி செய்து விடுகிறது ஒரு அணைப்பு

அணைத்திருப்பதிலிருந்து
விலகியிருப்பதாய் தோன்றும்
கணங்களில்
பேசும் எல்லாமே
கசப்பானதாயிருக்கிறது