உயிரின் ஓசை
உயிரின் ஓசைமென்விரல்களால் உன் இதயம்
தொட்டேன் முன்பொரு பனிக்காலத்தில்.
பகிர்வுகள் ஏதுமற்ற என்னுலகில்
அன்பின் காரணங்கள் சொல்லி நுழைந்தாய்..
நீயொரு தேவதையென்றும் தெய்வப்பெண்ணென்றும்
பாசாங்கான சொற்களை இட்டு நிரப்பினாய்..
பட்டுத் துளிர்ந்த வெண்மைவெளிகள் இற்றுப்போயின
பின்னொரு கடும் கோடைக் காலத்தில்...
விசும்புகின்ற உயிரின் சப்தங்களை புறந்தள்ளி
புரிதலற்ற பார்வைகளால் பிரிந்து செல்கிறாய்..
விளிம்பில் ததும்பி நிற்கும் என் நீர்த்துளிகள்
காலநதியில் பிரவாகமாகி பெருவெள்ளமாய் நீள்கிறது
வெகு தூரத்தில் எங்கோ ஒரு மோகமலர்
உதிரும் சத்தம் சன்னமாக கேட்கையில்
மெல்ல இருள்கிறது என் வானம்...
தீண்டும் இன்பம்
உயிர் திளைத்த நொடிகளில்
எழவே முடியாத ஆழத்துக்குள்
ஒவ்வொரு முறையும் அப்படியேக் கிடக்க
ஆசைப்படுகிறோம்...
அமுதாகவும் ஆலகால விஷமாகவும்
ஆகிப் போகிறோம் சில போழ்துகளில்...
தீத் தீண்டும் இன்பக் கணங்கள் யாவையும்
சேர்த்து வைத்துக் கொள்ள ப்ரியப்படுகிறோம்...
எல்லாம் தீர்ந்து விலகிய பின்....
அவரவர் போர்வைக்குள்ளிருக்கும்
ரகசியக் கனவுக்குள் புதைந்து கிடக்கிறோம்!
சொற்கள் காத்திருக்கின்றன
காதல் தீர்ந்து போன ஒரு பின்னிரவை
கடந்து போக நினைத்து தோற்றுக் கொண்டிருந்தேன்..
இருள் சூழ்ந்த மரத்தின் அடியில்
ஏதோ ஒன்றின் சத்தம்
கசிந்து வந்தது கதவுகளின் வழியே
ஒரே இரவில் பாலைவனமென
மாறிவிட்டது முடிந்து விட்ட என் தீராக் காதல்!
இயலாமையுடன் தீர்ந்துவிட துடித்தன
என் தனிமையின் காலங்கள்!
ஒரு கவிதைக்காகவும்
இன்னும் ஒரு காதலுக்காகவும்
மேலும், சொற்கள் காத்திருந்தன!
(‘உயிர் எழுத்து’ மார்ச் 2009 இதழில் வெளிவந்த கவிதைகள்)
No comments:
Post a Comment