பாலியல் தொல்லைகள்-குழந்தைகளை இப்படிப் பழக்குவீர்!
குழந்தைகள் மீதான பாலியல் தொல்லைகள் வன்முறைகள் பற்றி நாளிதழ்களில் செய்திகள் வராத நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நாளுக்கு நாள் இவை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது, பல காலமாக இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்றாலும் சமீப காலங்களில்தான் அதிகமாக வெளியே தெரியவருகிறது. இன்னும் பல சம்பவங்கள் வெளியில் சொல்லாமல் மறைத்து வைக்கப்படுகின்றன. பல சமயங்களில் குழந்தைகள் இது போன்ற தொல்லைகளுக்கு ஆட்படும்போது வெளியில் சொல்வதில்லை. காரணம் இதை செய்பவர்கள் மிகவும் தெரிந்தவர்கள் குடும்ப நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள், ஆசிரியர்கள், வடிவங்களில் இருப்பதுதான். சில நேரங்களில் அதிக நம்பிக்கை வைத்து அடுப்படி வரை அனுமதிக்கும் நபர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கேள்விப் பட்டிருப்போம்.
எங்கேயோ எப்போதோ நடக்கிறது. நமக்கு அப்படியெல்லாம் நடக்காது என்று அலட்சியத்துடன் இருந்துவிட முடியாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எச்சரிக்கையுடன் கவனிப்பது மட்டுமல்லாமல் குழந்தைகளுடன் விளையாட்டாகப் பேசி பள்ளியில், பள்ளிக்கு செல்லும் வழியில், வீட்டில் குழந்தை தனித்திருக்கும் சந்தர்ப்பங்களில் என்ன நடந்தது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். குழந்தைகளுடைய அன்றாட நடவடிக்கைகளில் திடீர் மாற்றம் ஏதேனும் தென்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
நம் சமூகத்தில் ஒருவரை ஒருவர் தொட்டுப் பேசுவது இயல்புதான். என்றாலும் பெண்குழந்தைகளை சாதாரணமாக தொட்டுப் பேசுவதற்கும் தகாத எண்ணங்களோடு தொடுவதற்கும் உள்ள வித்தியாசங்களை அம்மா அல்லது பாட்டி போன்ற பெரியவர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். Good Touch எது Bad Touch எது என்பதை குழந்தைகள் உணர கற்றுக் கொடுக்கவேண்டும் . குழந்தைகள் அதை உணர்ந்து எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால் பல அசம்பவிதங்களில் இருந்து தப்பிக்க முடியும். அதை உணர்த்த வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கடமையாகும்.
தொடுதலின் வகைகள்:
- பாதுகாப்பான தொடுதல்: இந்த வகை தொடுதலில் குழந்தைகள் பாதுகாப்பாக உணர்வார்கள், தாயின் அணைப்பு, தந்தையின் அரவணைப்பு, தாத்தா பாட்டியின் அன்பான தொடுதல்,தட்டிக் கொடுத்தல், போன்றவை.
- பாதுகாப்பற்ற தொடுதல்: தள்ளி விடுதல், எட்டி உதைத்தல், கிள்ளுதல், அடித்தல் , பெரும்பாலும் சக நண்பர்கள், தோழிகளாலும், விளையாட்டின் போதும் நிகழ்வது. இவ்வகைத் தொடுதல் வலியையும் காயத்தையும் ஏற்படுத்தக் கூடியவை, இவையும் தவிர்க்கப் பட வேண்டியவையே!
- தேவையற்ற தொடுதல்: இதுதான் ஆபத்தானது. இது பாதுகாப்பானது என்றே குழந்தைகள் நினைக்கக் கூடும். நன்கு தெரிந்த நபராக இருந்தாலும் குழந்தைகளின் உடலில் கண்ட இடங்களை தொடுவது சரியல்ல என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.
குழந்தைகளுக்கு சொல்ல வேண்டியது என்னென்ன? இதோ இந்தப் படங்களைப் பாருங்கள்
தொடுதல் விதி
எந்த உறுப்புகள் உன் உள்ளாடைகளால் மறைக்கப் பட்டுள்ளதோ அவைதான் உன் தனிப்பட்ட உறுப்புகள்.உன் உடல் ஆரோக்கியத்திர்காகத் தவிர வேறு காரணங்களுக்காக அவற்றை வேறு காரணங்களுக்காக மற்றவர்கள் தொடுவதோ பார்ப்பதோ அதைப் பற்றிப் பேசுவதோ சரி இல்லை.
கட்டியணைப்பது
உன் மனசுக்கு பிடிச்சவங்க உன்னை கட்டி பிடிச்சிகிட்டாலோ, முத்தம் குடுத்தாலோ உனக்கு சந்தோஷமாகூட இருக்கும்.அப்படி செஞ்சவங்க அதை ரகசியமா வச்சிருக்கச் சொன்னா உடனே அம்மா கிட்டயோ அல்லது நம்பிக்கையான பெரியவங்ககிட்டயோ சொல்லிடனும்
பரிசு
சிலபேர் சில சமயங்களில் பரிசு காசு இனிப்பு கொடுத்து ஏமாத்தி அவங்கள் சொல்றபடி நடக்க வைப்பாங்க. அப்போது சங்கடமாவும் குழப்பமாவும் இருந்தா அவங்க கொடுக்கறதை வாங்காத. அவங்க சொல்றதையும் செய்யாதே.
ரகசியம்
தொடுதல் பற்றிய ரகசியம் நல்லதல்ல. தொடுதல் விதிகளை மீற முயற்சி செய்தாலோ அல்லது உன்ன ரகசியமா வச்சுக்க சொன்னா அதை உடனே நீ நம்பற பெரியவங்க கிட்ட சொல்லணும்
வேண்டாம்னு சொல்லணும்:தொடுதல் விதியை யாராவது மீறினால் "வேண்டாம்"னு சொல்லக் கத்துக்கறது ரொம்ப அவசியம். இதை ரொம்ப சத்தம் போட்டு சொல்லணும்
உன்னை யாராவது தொடும் முறை கவலையோ குழப்பமோ பயமோ ஏற்படுத்தினால் உடனே நீ நம்பற பெரியவங்க கிட்ட அதைப் பத்தி சொல்லிவிடு. உதாரணமா உன்னுடைய அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, டீச்சர் இப்படி யாராவது. நீ முதலில் சொல்றவங்க உதவி செய்யலைன்னா வேற ஒருத்தர்கிட்ட சொல்லு. உனக்கு உதவி கிடைக்கும் வரை சொல்லிக்கிட்டே இரு
உன்மீது தவறு இல்லை:
தொடுதல் விதி மீறி சிலர்உன்னை காயப் படுத்தினால் அது உன் தவறு இல்லை.சில சமயங்களில் உன்னால் "வேண்டாம்"என்று சொல்ல முடியவில்லை என்றாலோ அல்லது அந்த இடத்தில் இருந்து விலகிச் செல்ல முடியவில்லை என்றாலோ அல்லது மிகவும் பயமாக இருந்தாலோ ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள். காயப்படவேண்டும் என்று நீ விரும்பவில்லை.அதற்கு நீ காரணமும் இல்லை.உன்னால் எப்போது மற்றவரிடம் சொல்ல முடியுமோ அப்போது சொல்லலாம்.
மேற்கூறிய அனைத்தையும் குழந்தைகளுக்கு தயங்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவை பெண் குழந்தைகள் மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் தெரிவிக்கவேண்டிய அவசியம் உள்ளது.
அரசுபள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை பற்றிய விழிப்புணர்வுப் பயிற்சிகூட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் அளிக்கப் பட்டது . இந்தப் பிரச்சனை அடித்தட்டு மக்கள், நடுத்தர மக்கள், வசதி படைத்தோர் அனைவருக்கும் பொதுவானதே!
இந்த தகவல்கள் பயனளிக்கும் என்று நம்புகிறேன். இவற்றை குழந்தைகளின் கவனத்திற்கு உரிய வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்.
1 comment:
இந்தக் கட்டுரை எனது வலைப்பக்கமான www.tnmurali.com இல் 19.03.2013 அன்று என்னால் எழுதப்பட்டது அப்படியே காப்பி செய்யப்பட்டுள்ளது
டி.என்.முரளிதரன்
Post a Comment