முகம் தெரியா என் காதல் கணவனுக்கு!!!!!?...
* ரவிவர்மன் ஓவியம் போல்
என் மனதில் நான் வரைந்துவைத்த
கற்பனைக் காவியமே...
கண்ணிறைந்த காதலனே...
* காலங்கள் கரைந்தோட,
கனவுகளும் எனையாள,-என்
கற்பனை நாயகனே,
என் காத்திருக்க வைப்பதேனோ?...
* அன்னையாக வருவாயோ?
எனையாளும் தந்தையாக வருவாயோ?
தோள்கொடுத்து அரவணைக்கும்
தோழனாக வருவாயோ?
மாயங்கள் தான் புரிந்து,
என் வாழ்வில் மாற்றங்கள் தருவாயோ?
* மருமகனாய் வந்து
மகனாகிப் போவாயா?
இல்லை,
இருக்கின்ற கூட்டத்தில்
நீயும் ஒன்றாகிப் போவாயோ?
* என் கற்பனை வாழ்விற்க்கு
தூரிகையாய் இருப்பாயா?
இல்லை,
துயர்கொண்டு நிறைக்கும்
துன்பமாய்ப் போவாயோ?...
* தூங்காமல் நான் சேர்த்துவைத்த
இரவெல்லாம் காதல் கொண்டு நிறைப்பாயா?
இல்லை,
தூக்கத்தை தூக்கிலேற்றி
துயர் கொண்டு நிறைப்பாயோ?
* இதுவரை வாழ்த்த வாழ்க்கை
வீணென்று சொல்வாயா?
இல்லை,
உனைப் பார்க்காமல் இருந்திருந்த
காலமே மேல் என்று சொல்வாயோ?
* நம் குடும்பத்தின்
வேராய் அன்போடு படர்வாயா?
இல்லை,
உன் குடும்பம் வேறு,
நம் குடும்பம் வேறு என்று
வேறு வேறாய்ப் பிரிப்பாயோ?
* எனக்கென்ற என் திறமைதனை
தட்டிகொடுத்து வளர்ப்பாயா?
இல்லை,
தனித் திறமை என்பதெல்லாம்
தனக்கு ஒத்துவாராதென்று,
தார்மீக தடைதனை விதிப்பாயோ?
* சண்டைகள் வரும்போதெல்லாம்
சமாதனம் செய்வாயா?
இல்லை,
" சனியன் " வந்த வேலையென,
தாய்வீடு அனுப்புவாயோ?
* அந்திநேரம் என் மடிசாய்ந்து
உன் அலுவலக கதைதனைச்
சொல்வாயா?
இல்லை,
ஆண்மகன் நானென்று ஆணாதிக்கம்
புரிவாயோ?
* எது எப்படியோ ...
முகம் தெரியா என் காதல்
கணவனே...
வருகின்ற காலத்தில்,
காதலோடு நானிருப்பேன்...
உனக்கொரு துயர் என்றால்
என் உயிர்க்கொண்டு
உன் துயர் துடைப்பேன்...
உன் தாரமாக இல்லாமல்
உனக்கொரு தாயாக நானிருப்பேன்..
என் அன்னைக்கு மேல்
இவள் என்ற பெயர் எடுப்பேன்...
காதல் கொண்டே
நம் காலம் முடிப்பேன்..
* ரவிவர்மன் ஓவியம் போல்
என் மனதில் நான் வரைந்துவைத்த
கற்பனைக் காவியமே...
கண்ணிறைந்த காதலனே..
முகம் தெரியா தூயவனே
உனக்கே தான் இக்கவிதை..
உனக்கே தான் இக்கவிதை..
No comments:
Post a Comment