Mail Me

antos songs

Friday, May 20, 2011

"எனக்கு மட்டும் ஏன் இப்படி "

 "எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகிறது" என்று விசும்பும் நிறைய குரல்களை
நாம் கேட்டிருப்போம். அதையே கேட்டு, கேட்டு- அல்லலுரும் நிறைய
மனிதர்களையும் நாம் பார்த்திருப்போம். யாரெல்லாம் இப்படி சொல்ல
கேட்கிறோம் என்று பார்த்தால், ஏமாற்றங்களையே அனுபவிப்பவர்கள் மற்றும்
தோல்விகளையே சுவாசிப்பவர்கள்... அலைகழிக்கப் படுபவர்களில் சில
சதவிதத்தினர்.

அதே நேரம் இன்னொரு கேள்வியும் மனதில் எழக்கூடும். ஏமாற்றங்களை அனுபவிக்கும் எல்லோரும் அல்லது தோல்விகளை சந்திக்கும் எல்லோரும் - இப்படி தான் கேட்டு கொள்வார்களா என்று பார்த்தால் - பதில் -இல்லை என்று தான் தெரிய வரும். எதிர் நிச்சல் குறித்த எண்ணமில்லாதவர்கள் மாத்திரமே- "எனக்கு மட்டும் ஏன் இப்படி" என்று கேட்க கூடியவர்களாக இருப்பார்கள். சின்ன, சின்ன விஷயத்திற்கு கூட, அற்ப காரணத்திற்காக கூட, "எனக்கு மட்டும் ஏன் இப்படி" என்று புலம்புவார்கள்.

ஒரு சின்ன உதாரணம்... பேருந்து நிறுத்ததில், பேருந்திருக்காக காத்திருக்கும் போது - தமக்கான பேருந்து வர தாமதமானால் கூட, "எனக்கு மட்டும் ஏன் இப்படி" என்று பதட்டப்பட ஆரம்பிப்பார்கள். நிச்சயம் பல நேரம், இவர்களின் செயல்பாடுகள்- பிறருக்கு வேடிக்கையாகவே தான் இருக்கும். அதுவே சில நேரம் எரிச்சலானதாகவும் மாறக் கூடும். இவரை போலவே, அந்த பேருந்துக்கு- குறைந்த பட்சம் பத்து பேராவது காத்திருக்க கூடும். ஆனால் வேறு எவருமே இவரை போல், பதட்டமடைந்திருக்க மாட்டார்கள். இவர்களுக்கு மட்டும் ப்ரத்யோக பதட்டம்.

வாழ்க்கையில், நடக்கும் நிறைய விஷயங்கள், "எனக்கு மட்டும் ஏன் இப்படி"
என்று கேட்கும் ரீதியில் தான் அமையப் பெற்று இருக்கும் என்பதை மறுக்கவும்
இயலாது. அதை தவிர்க்கவும் இயலாது. நம்மை விட பலவீனமானவன் வெல்லும் போதும், நம்மை விட திறமை குன்றிய நபர் ஜெயிக்கும் போதும் - இந்த விசும்பலை தவிர்க்க முடியாது. அவனால் பலவீனமாக இருந்து கொண்டும், எப்படி ஜெயிக்க முடிந்தது என்று தான் பார்க்க வேண்டுமே ஒழிய, "எனக்கு மட்டும் ஏன் இப்படி" என்று கேட்டு கொண்டு மாத்திரம் இருந்து விடலாகாது.

அது நமது பலவீனத்தை வெளியே காட்டுவது போலாகி விடும். அவன் பெரிய புலம்பல் கேஸ் என்கிற விமர்சனத்துக்கு ஆளாக நேடும். இந்த விஷயத்தில், வெறுமனே புலம்பிக் கொண்டு, கண்ணை மூடிக் கொண்டிருப்பது சரியல்ல. கண்ணை திறந்து பார்க்க வேண்டும். பல நேரம் நாம் அக்கம் பக்கங்களை சரியாக பார்ப்பதில்லை.

உதாரணத்திற்கு, சிக்கன் குனியா எல்லோருக்கும் தான் வந்தது. " "நமக்கு
மட்டும் வந்த மாதிரி" புலம்பலாமா. கண்களை திறந்து, "நமக்கு மட்டும் தான்
இப்படியா" அல்லது "நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் இப்படியா" என்று
பார்த்தால் தான், யார் யாருக்கெல்லாம் என்ன என்ன நேருகிறது, நமக்கு
என்னவெல்லாம் நேர்ந்தது என்பதையும் அறிய முடியும்.

ஒரு சிக்கலில் இருந்து பிறர் எப்படி மீள்கிறார்கள்... நாம் மட்டும் ஏன் மீளாமல் தவிக்கிறோம் என்பதும் அறியக்கூடியதாக இருக்கும். அப்போது நமது "நமக்கு மட்டும் ஏன் இப்படி" என்கிற கேவல், அனாவசியமானதாய் தோன்றும். நிறைய விஷயங்கள், பார்க்கின்ற பார்வையில் தான், பெரிது, சிறிதாக வடிவம் பெறும்.

இயக்குனர் K.பாலச்சந்தர், நாகேஷ் மூலம்- ஒரு திரைப்படத்தில் சொன்ன விஷயம் இது தான். அது யாதென்றால், "ஒரு சிறு கல்லை, கண்ணுக்கு மிக அருகாமையில் வைத்து பார்த்தால், மிக பெரிய மலையை போல் பிரம்மாண்டமானதாய் தோன்றி நம்மை அச்சுறுத்தும். அதே கல்லை சற்று தள்ளி வைத்து பார்க்கும் போது, அது ரெம்ப சின்னக்கல் என்பது தெரிந்து, "ச்சீ... போயும் போயும் இதற்கா அச்சப்பட்டோம் என்று தோன்றும்.

இந்த அலசி ஆராயும் பண்பு நம்மை நிச்சயம், "நமக்கு மட்டும் ஏன் இப்படி " என்று புலம்ப செய்யாது. நம்மை வீணே அச்சுறுத்தும், பல விஷயங்களில் இருந்து நாம் நிச்சயம் வெளியே வர முடியும். அதீத வெற்றி- சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. அந்த வெற்றியை, ஒரு வேளை நாம் அடைய நேர்ந்தால், "எனக்கு மட்டும் ஏன் இப்படி வெற்றியாக வருகிறது" என்று கேட்போமா. நிச்சயம் கேட்கவே மாட்டோம். அப்படியே வேறு யாராவது - வியப்பாக கேட்டால், "முயற்சிக்கிறேன். அதனால் வெற்றி பெறுகிறேன்" என்பதே நம் பதிலாக இருக்கும்.

அதே போல் தான் தோல்வி, கஷ்டம், பிரச்சனை என்று மனதை நெருடும் பல, நம்மை அன்மிக்கும் போது, "எனக்கு மட்டும் ஏன் இப்படி" என்று கேட்டு விடக்கூடாது. அப்படியே ஏன் சோர்ந்து போனிங்க என்று யாராவது கேட்டால், "சரியாக பிரச்சனையை கையாளாததால் மேலும் சிக்கல்... போட்டியை சரியாக உணராத தால் தோல்வி" என்று பின்னடைவின் காரணத்தை சொல்லி, அதற்கு பிராயச்சித்தம் காண வேண்டுமே ஒழிய, "எனக்கு மட்டும் ஏன் இப்படி" என்று புலம்பி கொண்டிருப்பது, எந்த விதத்திலும் நமக்கு பெருமை சேர்க்காது.

எல்லோருக்கும் நிகழ்வதே நமக்கும் நிகழ்கிறது. நமக்கு நடப்பதே பிறருக்கும் நடக்கிறது. சந்தோஷத்தை மட்டுமே வரமாய் வாங்கியவர் எவரும் இல்லை. மிகச் சிறந்ததையே, "சிறந்தது" என்று ஒப்புக்கொள்ளாத. ஏற்றும் கொள்ளாத உலகம் அல்லது மனித மனம், சிறப்பற்ற ஒன்றை சிறந்தது என்று எப்படி சொல்லும்.

பொதுவான சில அடிப்படை உண்மைகளை நாம் உணர்ந்து கொண்டால், "எனக்கு மட்டுமே ஏன் இப்படி" என்று கேட்க 
வேண்டிய அவசியமே இல்லாமல் போகும்

No comments:

Post a Comment