திருமண வாழ்த்து
கரும்புச்சாறில் கற்கண்டு கலந்து இன்பத்தேன்
கலந்து இதமாய் அமுது படைக்க
அன்னவள் வருகிறாள் அன்ன நடையில்
அன்பில் நனைத்து ஆரத்தழுவு தம்பி
உன்னை உலகமென ஒப்படைத்தாள் தன்னை
உவப்புடன் உரிமைக் கொள் உலகறிய
இப்புவியுள் இன்பம் துய்க்க இன்முகம்
முழுதும் புன்னகை ஏந்தும் பொற்கொடி
மருத நிலத்து மருக்கொழுந்து அவள்
குறிஞ்சி நிலத்து மானடா நீ
விருந்துக்கா பஞ்சம்,- அரும்பும் ஆசைகள்
துளிர்த்து செழிக்க தோட்டம் இருக்கு
கனிந்த காதல் நம் கலாச்சாரம்
கனியும் கனிச்சாறு ஒழுகும் அன்பில்
நனையும் நீவிர் நாணியும் போவீர்
அன்னையும் பிதாவும் அகமகிழ வாழ்வீர்
பிள்ளையும் பெரும் பேறுகளும் பெறுவீர்
முத்தமிழ் நம் சொத்து முக்கண்ணன்
நம் கடவுள் பிள்ளைப் பேசும்
பிஞ்சுத் தமிழ்க்கேட்டு நெஞ்சு நிறை.
குடும்பப் பெருமை குலப் பெருமை
அரும்பும் மொட்டுக்கு பாட்டன் சொத்து
அழியாமல் காத்து வளர்த்து காப்பாற்று
குழந்தையோடு குலப் பெருமை வளமையும்
சங்கத் தமிழ் சங்கு பாலில்
சங்கம மாகட்டும் தாய்ப்பாலும் தாய்மொழியும்
நம் கண்கள் மறந்து விடாதே....
பிறவிப்பயன் பெற்றவனே "சக்தி"யின் கொற்றவனே.
ஆனந்தக் கடலில் ஆழ்க்காதல் மூழ்கி
அனுபவ முத்தெடுக்க வாழ்க்கை வளம்
அள்ளி நலம் யாவும் வழங்கட்டும்
அன்பனே தம்பி சுகம் காண்பாய்.
ஊராரும் உற்றாரும் போற்ற ஊரில்
மாற்றாரும் மெச்ச இருவரும் இணைந்து
நல்லற மென்னும் இல்லறம் அமைக்க
ஆசீர்வாதங்களுடன் அன்பு அண்ணன்
No comments:
Post a Comment